இலங்கையில் 30 ஆண்டுகால போரினால் சீர்குலைந்துள்ள உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைத்தல் மற்றும் அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது.
சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை கருவூலத்துறை அமைச்சர் ஜெயசுந்தரேவிடம் இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
சீனா சென்றுள்ள ஜெயசுந்தரே, சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை டிசம்பர் 25ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தவிர, இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள், அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தரே எடுத்துக்கூறினார்.
இதையடுத்து அந்நாட்டுக்கு மேலும் உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார்.
இருவரின் சந்திப்புக்கு பின்னர் சீன அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசு, நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருவதாக ஜெயசுந்தரே கூறியதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment